தமிழ் வருடங்கள் 60ல் விஜய வருடம் 27ஆம் ஆண்டாக வருகிறது. தமிழ் வருடப்பிறப்பின் முதல் நாளில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். இவை கணிதப்படி பலன்களை கூறுகின்றன. ஜயம் என்றால் வெற்றி.
விஜயம் என்றால் மிகப் பிரமாண்டமான வெற்றி. இந்த விஜய வருடத்தில் எந்தச் செயலைத் துவக்கினாலும், அது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கவல்லது என்கின்றன ஞான நூல்கள். சூரியன் உதயமானதும், இருள் விலகி எப்படி வெளிச்சம் பாய்கிறதோ, அதேபோல், விஜய வருடம் துவங்கியதும் மங்கல காரியங்களும் சத் காரியங்களும் வரிசைகட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாங்கத்தின் சிறப்பு எவரொருவர் இந்தப் புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கிறாரோ, அவருக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்! அவர்கள் விரோதிகள் இல்லாதவர்களாக, தீயகனவுகள் ஏதும் இல்லாதவர்களாக வாழ்வர்; புனித கங்கையில் குளித்த புண்ணியத்தைப் பெறுவர்; பசுவை தானம் செய்த பலனை அடைவர்;
நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் என்பது திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம் மற்றும் கரணம் என ஐந்து அங்கங்களை, உறுப்புகளைக் கொண்டவை.
இந்த விஜய வருடம் பற்றி திருக்கணித பஞ்சாங்கத்தில் என்ன கூறியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்களேன். சூறாவளி மழை உலகத்தில் அனைத்து இடங்களிலும் சூறாவளி காற்றுடன் நல்ல மழை பெய்யும். புஞ்சை தானியங்கள் அதிக அளவில் அறுவடை ஆகும். சில குறிப்பிட்ட டெல்டா பகுதிகளில் மழையால் அதிக அளவு விவசாயம் பாதித்து விவசாயிகள் கடுமையான அளவில் பாதிக்கப்படுவார்கள்.
வட ஆற்காட்டில் ஏமாற்றிய மழை தவறாமல் இந்த வருடம் பொழிய வாய்ப்புள்ளது. வடக்குப் பிரதேசம் மிக அதிக அளவில் பாதிக்கும். மருந்து வகை, இரும்பு, விலை ஏறும். வெடி வகைகளுக்கு பல புதிய சட்டங்கள் அரசாங்கம் கொண்டு வரும். சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கும். நீர்த்தேக்கத்தில் இடி விழுந்து பாதிப்பு ஏற்படும். ஊட்டி, கொடைக்கானல் கர்நாடகா, இமாச்சலம் ஆகிய பகுதிகளில் கடுமையான மூடுபனி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும்.
கரிசல் பூமி, மணல் பூமி இவைகளில் மரம், செடி கொடிகள் செழிப்பாக வளரும். இந்த ஆண்டு ஆதாயம் 53, விரையம் 56 என கூறப்பட்டுள்ளது. ஆதாயத்தை விட விரையம் கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும். எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும் ஆளும் கட்சியை பாதிக்காது. கருப்பு பணம் கிடைக்கும் நல்ல மழை பெய்யும்.
கருப்பு பணம் கோடிக்கணக்கில் அரசாங்க கஜானாவிற்கு வரும். பொன், வெள்ளி, இவற்றின் விலை நிலையில்லாத நிலையில் இருக்கும். மதுபான வகையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும். ரசாயனம், விவசாயத்துறையில் அரசு ஆர்வம் காட்டும். இரும்பு, சிமெண்ட், மணல் உள்ளிட்டவைகளின் விலை குறையும். வெடி பொருட்களின் கிடங்குகளில் தீ விபத்து ஏற்படும்.
கடலில் ராட்சத அலைகள் உருவாகும். இந்த விஜய வருடத்தின் ராஜா குரு பகவான். குரு பார்க்க கோடி தோஷங்களும் விலகும். எனவே, இந்த விஜய வருடம் நமக்கும் நம் நாட்டுக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது